Tuesday, 15 October 2019

கார்த்திகை நட்சத்திர பலன்கள்


மற்றவர்களை அண்டி பிழைக்காமல், தமது சுய முயற்சியால், முன்னேற நினைப்பவர்கள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
ராசி சக்கரத்தில் மூன்றாவது நட்சத்திரமான கார்த்திகை, முருகனுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும். கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷ ராசியிலும், எஞ்சிய மூன்ற பாதங்கள் ரிஷப ராசியிலும் அமைந்துள்ளன.
அ, இ, உ, எ ஆகிய எழுத்துக்கள் பெயரின் முதல் எழுத்துக்களாக இருப்பவர்களும், கார்த்திகை நட்சத்திரத்தின் ஆதிக்கம் உள்ளவர்கள் ஆவர்.
மேஷ ராசியில் உள்ள கார்த்திகை நட்சத்தில் பிறந்தவர்கள், அலைந்து, திரிந்து, ஓடி, ஆடி வேலை செய்வதில் விருப்பம் உள்ளவர்கள். ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஓரிடத்தில் நிலையாக இருந்து வேலை செய்வதை விரும்புவார்கள்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவு கூர்மை நிறைந்தவர்கள். ஆனால், ஒரு செயலை தொடந்து செய்வதில் ஆர்வம் இல்லாதவர்கள். அடிக்கடி சலிப்பு ஏற்பட்டு, தங்களது முயற்சிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
பொதுவாகவே, கார்த்திகை நட்சத்திரக்காரர்கள், பிறருக்கு அறிவுரை சொல்லி, அவர்களது பிரச்சினைக்கு தீர்வு காணும் திறமை படைத்தவர்கள்.
எதிலும், நேர்மையான அணுகுமுறையை விரும்புவார்கள், சுய கெளரவம் பாதிக்கப்பட்டால், எவ்வளவு உயர்ந்த பொறுப்பையும், நட்பையும், வாய்ப்பையும் உதறித்தள்ள தயங்க மாட்டார்கள்.
இவர்கள், பணம் பொருளை விட கௌரவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
முறையற்ற வழியில் பொருள் ஈட்ட விரும்பமாட்டார்கள். அதற்கு இவர்களின் மனது இடம் கொடுக்காது. அதேபோல், பிறர் தயவில் வாழ்வதோ, பிறரை அண்டி பிழைப்பதோ இவர்களுக்கு பிடிக்காது.
ஆனாலும், பொருள் சம்பாதித்து தனது சுய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வார்கள். எதையும் திட்டமிட்டு துணிந்து செயல்பட்டு செய்து முடிக்கும் ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பலர், படிப்பு, வேலை வாய்ப்பு போன்ற ஏதாவது ஒரு சூழல் காரணமாக, குடும்பத்தை பிரிந்து இருக்க நேரும். குடும்ப பாசம் இவர்களுக்கு அதிகம் இருக்காது. ஆனாலும், குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து விலக மாட்டார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கும் இதே குணம் நிறைந்திருக்கும். குறிப்பாக அழகு, அறிவு அத்துடன் சுய கெளரவம் நிறைந்தவர்கள். பல பெண்கள் தனித்து வாழ்பவர்களாக இருப்பார்கள் அல்லது தனித்தன்மையுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், சுய மரியாதையோடு வாழ்வதையே விரும்புவார்கள்.
கார்த்திகை நட்சத்திரம், கத்தி, வாள், ஹோமத்தில் ஏற்படும் தீ போன்ற வடிவம் கொண்டதால், தொழில் வணிகம் செய்பவர்கள் இதை லோகோவாக பயன்படுத்தலாம்.
கார்த்திகை நட்சத்திரம் ராட்சத குண நட்சத்திரமாகும். இதன் அதிதேவதை அக்னி. பரிகார தெய்வம் சிவன். இந்த நட்சத்திரத்திற்கு உரிய செவ்வரளி மலர்கள் கொண்டு பூஜிக்கலாம்.
மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பழனி மலையில் உள்ள போகர் ஜீவ சமாதி, புலிப்பாணி சமாதி ஆகியவற்றை வழிபடலாம். ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள், முறையே  திருப்பரங்குன்றத்தில் உள்ள மச்ச முனி ஜீவ சமாதி, எட்டுக்குடி, ஸ்ரீ வான்மீகர் ஜீவ சமாதி, திருவண்ணாமலை இடைக்காடர் ஜீவ சமாதி ஆகியவற்றுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.
கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் அத்தி என்பதால், அத்தி மரக்கன்றுகளை நட்டு நீரூற்றுவது நல்லது. அல்லது, கோயில் மற்றும் பிற இடங்களில் உள்ள அத்தி மரங்களுக்கும் நீர் ஊற்றலாம்.
இதன் மிருகம் பெண் ஆடு. பறவை மயில். எனவே இவற்றுக்கு இடையூறோ தொந்தரவோ கொடுக்க கூடாது.
கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய திருத்தலம், மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், கஞ்சா நகரம் என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு காத்திர சுந்தரேஸ்வரர் உடனுறை துங்கபால ஸ்தானம்பிகை ஆலயமாகும். கார்த்திகை நட்சத்திர தினத்தன்று இந்த ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நல்லது.
கார்த்திகை நட்சத்திர காரர்கள், தங்களது நற்பலன்களை பெருக்கிக்கொள்ள அன்னதானம் செய்வது நல்லது.

No comments:

Post a Comment