ஞானமும் கல்வியும் நிறைந்த மீனம்
ராசி மண்டலத்தின் கடைசி ராசியாக அமைந்துள்ளது மீன ராசி. அறிவின்
கிரகமான குருவை, அதிபதியாக கொண்ட இந்த ராசியில் பிறந்தவர்கள், ஞானமும்
கல்வியும், நல்ல நூல்களை அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம்
பாதம், உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள், ரேவதி
நட்சத்திரத்தின் நான்கு பாதங்களை கொண்டது மீன ராசி.
இது நீர் ராசியாக இருப்பதால், அமைதியும், மென்மையும்
கலந்த அம்சமாகவும், அடுத்தவர்களை கவர்ந்து இழுக்கும் வசீகரமும் நிறைந்து
இருக்கும்.
ஊர் விஷயம் தொடங்கி உலக விஷயம்
வரையிலும் தெரிந்திருக்கும், சாதாரண மனிதர்கள் தொடங்கி, சாதனையாளர்களின் தொடர்பும் மிகுந்திருக்கும்.
யுகங்களின் முடிவை சொல்லும் இந்த
ராசியில் ஆலிலை கிருஷ்ணன் துயில்வதால், எதிலும் கொஞ்சம் அலட்சியமும், சோம்பேறித்தனமும் மிகுந்திருக்கும்.
தூங்குவதற்காகவும், ஓய்வு
எடுப்பதற்காகவும் அவசரமான வேலைகளை கூட ஒத்தி வைக்கும் பழக்கம் இவர்களுடையது. இந்த
குணத்தை இவர்கள் மாற்றிக் கொண்டால், எளிதில் முன்னேற்றத்தை காணலாம்.
ஆற்று நீரின் போக்கை அனுசரித்து
செல்லாமல், எதிர் திசையில் பயணிக்கும் மீன், இந்த ராசியின் அடையாளம் என்பதால், எதிலும்
மாற்று பாதையை தேர்ந்தெடுப்பதும், எதிர்மறையான சிந்தனையில் செயல்படுவதும் இவர்களின் குணமாக
இருக்கும்.
யார் எந்த ஆலோசனை சொன்னாலும், அதை
இவர்கள் செவிகள் மட்டுமே கேட்குமே ஒழிய, மனது ஏற்காது. அனைத்தையும் கேட்டுக்கொண்டு, தனது
வழியில் மட்டுமே செயல்படுவார்கள்.
மற்றவர்களின் அனுபவத்தில் இருந்து பாடம்
கற்றுக் கொள்வதை விரும்பாத இவர்கள், ஒவ்வொரு தடவையும், கையை சுட்டுக்கொண்டு, தமது அனுபவத்தின் மூலமே பாடம் கற்பார்கள். ஆனாலும், அடுத்தவர்களின்
யோசனையை கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
சிறு வயதில் கடும் நெருக்கடிகளை
சந்திப்பவர்களும், குடும்ப அரவணைப்பு இல்லாமல் தவிப்பவர்களும், போராடி
சிறு வயதிலேயே முன்னுக்கு வந்து விடுவார்கள்.
நெருக்கடியை சந்திக்காமல், அரவணைப்பில்
வளரும் பெரும்பாலான மீன ராசிக்காரர்கள், கொஞ்சம் தாமதமாகவே முன்னேற்றத்தை சந்திக்க முடியும்.
என்னதான் அலட்சியமும், சோம்பேறித்தனமும்
இவர்களிடம் அளவுக்கு அதிகமாக இருந்தாலும், இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகமாகவே அமையும்
மீன ராசியில் பிறந்த பலருக்கு இளம்
வயதிலேயே தலை முடி உதிர ஆரம்பித்து விடும். அப்படி இளமையில் தலை முடியை இழந்த பலர், எளிதிளில்
முன்னேற்றத்தை அடைவதை காணலாம்.
மற்றவர்கள் சொல்லும் வேலையை
அலட்சியப்படுத்தினாலும், இவர்கள் தாமாக முன்வந்து கையில் எடுக்கும் வேலையை, நேரம்
காலம் பாராமல் முடித்து விடுவார்கள்.
மீன ராசியின் அதிபதியாக குரு இருப்பதால், இவர்களின்
அறிவும், ஞானமும் மெச்சத்தக்கதாக இருக்கும். பல பேருக்கு சிறிய வயதில்
மருத்துவ செலவுகள் அதிகமாக செய்ய வேண்டி இருக்கும்.
சொந்த வீட்டில் பிறக்காமல் மற்றவர்கள்
இல்லத்தில் பிறந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள். இவர்கள் வசித்த இடத்தில் இருந்த
கிணறுகள் பல மூடப்பட்டிருக்கும்.
நீர் சூழ்ந்த இடங்களில் மீன
ராசிக்காரர்கள் அதிக அளவில் வசிப்பார்கள். சங்கு, உப்பு, மீன், முத்து, பவழம் போன்ற கடல் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள், ஏற்றுமதி, இறக்குமதி
செய்யும் இடங்கள் போன்றவை மீன ராசியின் அடையாளங்கள் ஆகும்.
ஆழ்ந்த ஞானம், நுண்ணறிவு, ஆன்மீக
சிந்தனை, உலகியல் பார்வை என ஒவ்வொன்றிலும் அளவுக்கு அதிகமாக திறமை
பெற்றிருக்கும் மீன ராசிக்காரர்கள், சோம்பேறித்தனத்தையும், எதிர்மறை அணுகுமுறையையும் துறந்தால், உலகின்
மிகப்பெரிய சாதனையாளர்களாக திகழ்வார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
பணத்திற்கு பெரிய அளவில் நெருக்கடி
இருக்காது. ஏதாவது ஒரு வழியில் பணம் கிடைத்து விடும். அப்படியும் கிடைக்கவில்லை
என்றால், அதற்கு இவர்களின் தவறான முடிவே காரணமாக இருக்கும்.
சகோதர வழியில் பெரிய அளவில் ஆதரவோ, திருப்தியோ
கிடைக்க வாய்ப்பு இல்லை.
சிலருக்கு, வீடு, மனை, வாகனம், கல்வி, தாயாரின்
ஆதரவு, நல்ல துணைவர், நல்ல நண்பர்கள் இயற்கையாகவே அமையும்.
இவர்களில் சிலரது பூர்வீகமும், சந்ததியினரும்
பேசப்படும் அளவில் இருக்கும்.
வரவும், செலவும் சரியாக இருக்கும். கையை பிடிக்காது. சிறு தொகையாக
இருந்தாலும் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்தால், பணம் கரைவதை தடுக்கலாம்.
சுருக்கமாக சொன்னால், அறிவு, ஞானம், கிரியேட்டிவிட்டி, புத்திசாலித்தனம்
என அனைத்தும் நிறைந்த மீன ராசிக்காரர்கள், சோம்பேறித்தனத்தையும், எதிர்மறை சிந்தனையையும் துறந்தால், எளிதில்
வெற்றியை வசப்படுத்தலாம்.
தடைகள் அகல – அதிர்ஷ்டம்
பெருக
மீன ராசிகாரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை
பெருக்கி கொள்ள, செவ்வாய் பகவானுக்கு உரிய சிவப்பு நிற துணியை கைக்குட்டையாக
பயன்படுத்தி கொள்ளலாம்.
இடர்பாடுகள் மற்றும் தடைகளிலே இருந்து
விடுபட, புதன் கிழமைகளில் பச்சை நிற ரிப்பனை எடுத்து அதை, கத்தரி கோலால துண்டு, துண்டாக வெட்டி
போடுறது நல்லது. வலது கையில் கடிகாரம் அணிவது நல்லது என்றும் சிலர் கூறுகின்றனர்.
சட்டையின் உள் பாக்கெட்டில் சிவப்பு நிற
சுவஸ்திக் படம் வைத்து கொள்வது நல்லது என்று லால் கிதாப் கூறுகிறது.
மேலும்,
மொட்டை போட்டால் முழுவதும் அடிக்காமல், பிடரியில் கொஞ்சம்
முடி வைத்து அடிப்பது நல்லது.
வீட்டில் துளசி வளர்க்க கூடாது. அரசமர
பிரதட்சணம் மற்றும் வழிபாடு நன்மை தரும். வீட்டின் முன் புறம் கழிவு நீர்
தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மஞ்சள் துணியில் தங்க நாணயத்தை
வைத்து முடிந்து, பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்துக் கொள்ள செல்வம் பெருகும்.
கோழி குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை
பயக்கும்.
இவை அனைத்தும் மீன ராசிக்கான பொதுவான
பலன்களே. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள் மாறுபடும்.
No comments:
Post a Comment