Tuesday, 15 October 2019

உத்திராட நட்சத்திர பலன்கள்



கள்ளம் கபடம் இல்லாத செயலும், எளிமையான வாழ்க்கையை விரும்பும் குணமும் கொண்டவர்கள் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
வசதி வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக வாழ்வதே இவர்களின் தனித்தன்மை.
பே, போ, ஜ, ஜி போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் உத்திராட நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
சூரியனின் நட்சத்திரமான உத்திராடத்தின் முதல் பாதம், குருவின் வீடான தனுசிலும், எஞ்சிய மூன்று பாதங்கள் சனியின் வீடான மகரத்தில் இருப்பதால், மென்மையான அணுகுமுறையும், எடுத்துக்கொண்ட விஷயத்தில் உறுதியும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பெரியவர்கள், சிறியவர்கள் என எந்த வித்யாசமும் பார்க்காமல், மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் உள்ளம் படைத்தவர்கள் உத்திராட நட்சத்திர காரர்கள். ஆனால், இவர்களின் உள்ளத்தை யாராலும் யூகித்து  அறிய முடியாது.
எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும் அதை உறுதியாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
இவர்களது வெளிப்படையான அணுகுமுறை, சில நேரங்களில் மற்றவர்களின்  எதிர்ப்பை சம்பாதித்துவிடும். எனினும், அதற்காக, இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். புகழ்ந்து பேசினால், ஏமார்ந்து விடுவார்கள்.
முக்கியமான விஷயங்களை மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்கும் அணுகுமுறை இவர்களிடம் அதிகம் இருக்கும். அதில் குறைகளை சுட்டிக்காட்டினால், திருத்தி கொள்ள தயங்க மாட்டார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கும் இதே குணம் நிறைந்திருக்கும். தான் சரியாக சொல்லும் விஷயத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், ஏற்றுக்கொள்ளும் வரை போராடுவார்கள். ஆடம்பர வாழ்க்கையை விட எளிமையான வாழ்க்கையையே விரும்புவார்கள்.
உத்திராட நட்சத்திரத்தில் நின்ற கிரகம் புத்திர தோஷம் மற்றும் தாமத குழந்தை பேரு, சிறு வயதில் தாய் தந்தையை பிரிந்தவர்கள், இழந்தவர்கள் போன்றவற்றை சொல்லும்.
உத்திராட நட்சத்திரமானது, யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால் போன்ற வடிவங்களில் காணப்படுவதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தொழில் வணிகத்திற்கு இவற்றை லோகோவாகப் பயன்படுத்தலாம்.
மனுஷ கணம் கொண்ட உத்திராட நட்சத்திரத்திற்கு உரிய அதிதேவதை விநாயகர். பரிகார தெய்வம் துர்கை. திருப்பதியில் உள்ள கொங்கன சித்தர் ஜீவ சமாதியிலும் வழிபாடு செய்யலாம். உகந்த மலர் சம்பங்கி.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் பலா மரம். எனவே பலா மரத்திற்கு நீர் ஊற்றுவது நல்லது.
உத்திராட நட்சத்திரத்திற்கான மிருகம் ஆண் கீறி. பறவை வலியான். எனவே தொந்தரவு செய்யக்கூடாது.
சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர், கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் உடனுறை மீனாட்சியம்மன் ஆலயமே இந்த நட்சத்திற்கு உரிய ஆலயமாகும்.  எனவே, உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று, இந்த ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள நெய்தானம் செய்வது சிறப்பு.

No comments:

Post a Comment