ஆட்சி அதிகாரத்தில் ஆட்டிப்படைக்கும் சிம்மம்
சூரியனை அதிபதியாகவும், சிங்கத்தை
சின்னமாவும் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள், ஆட்சி மற்றும் அதிகாரத்தில்
இருந்து அனைவரையும் ஆட்டிப்படைக்கும் வல்லமை படைத்தவர்கள்.
மகம் மற்றும் பூரம் நட்சத்திரத்தின் நான்கு
பாதங்கள், உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதத்திலும் பிறந்தவர்கள் சிம்ம
ராசிக்காரர்கள் ஆவர்.
சிம்மம் என்பது சிம்மாசனத்தை குறிப்பதால், அரசியல் மற்றும் அரசாங்க உயர் பொறுப்புக்கள் இவர்களுக்கு எளிதில் அமையும்.
மலை மற்றும் மலை சார்ந்த இடங்கள், உயரமான பகுதிகள், மேடான பகுதிகள், குறைந்த பட்சம் மாடி வீடுகளில் அதிகமாக வசிப்பவர்களும் இவர்களே.
சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்கள், கம்பீரமாக இருப்பார்கள். எதிலும், எப்போதும் முதன்மையாக இருக்கவே விரும்புவார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள், தாம் இருக்கும் இடத்தில், எப்போதும் தமக்கென ஒரு ஆதரவாளர் கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்வார்கள்.
முகஸ்துதியையும், பாராட்டையும் அதிகம் விரும்பும் இவர்களை பாராட்டினாலும், புகழ்ந்து பேசினாலும், காரியத்தை சாதித்து கொள்ளலாம்.
இரக்க குணம், அரக்க குணம் இரண்டும் கலந்த
கலவையாகவே சிம்ம ராசிக்காரர்கள் பலர் இருப்பார்கள். இவர்களை
வாழ்த்தினால், அளவுக்கு அதிகமான இரக்கத்தை காட்டுவார்கள்.
எதிர்த்தால், அரக்க குணம் வெளிப்படும்.
சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த பல
பேருக்கு, திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள், ஆன்மீகவாதிகள் பலர்
நண்பர்களாக இருப்பார்கள். இந்த நட்பு ஆயுள் வரை தொடர்ந்து கொண்டே
இருக்கும்.
தாம் பெற்ற பிள்ளைகள் என்று இல்லாமல், மற்ற பிள்ளைகள் மீதும் அதிக பாசத்தை பொழியும் பண்பு இவர்களிடம் மிகுந்து காணப்படும்.
சிலர், தனக்கென பிள்ளைகள் இருந்தாலும், தத்து பிள்ளைகள் எடுத்து, அவர்களை அன்போடு வளர்ப்பதிலும் ஆர்வமாக இருப்பார்கள்.
பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை துணை, பணியாற்றுபவராக இருப்பார்கள்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணமான
புதிதில், இல்லறத்தின் மீது இருக்கும் ஆர்வம், படிப்படியாக
குறைந்து, இறுதியில் துறவி போல மாறிவிடுவதும் உண்டு.
இன்னும் சிலருக்கு, குழந்தைகள் பிறந்த பிறகு, இல்லறத்தின் மீதான பிடிப்பு குறைந்து விடுகிறது.
அதிர்ஷ்டம் சார்ந்த, சூதாட்டம், பந்தயம், விளையாட்டு, பங்கு சந்தை போன்றவற்றில் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆர்வம் அதிகம்.
காடு மற்றும் மலை பிரதேசங்களுக்கு சென்று
வருவதையும், அங்கு சில நாட்கள் தங்கி இருப்பதையும் சிம்ம ராசிக்காரர்கள்
அதிகம் விரும்புவார்கள்.
உணவு விஷயத்தில், ருசியாக, சூடாக இருக்கும்
உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். அதேபோல், மற்றவர்களுக்கும், சுவையான
விருந்து படைக்க விரும்புவார்கள்.
நண்பர்களுக்காக, பணத்தை தண்ணீர் போல செலவு செய்வது, சிம்ம ராசிக்காரர்களின் தனி குணம். இதனால், கடனாளி ஆவதும் உண்டு.
ஆனாலும், இவர்களிடம் திடீரென தலை எடுக்கும்
மூர்க்க குணம், சில நண்பர்களையும் எதிரிகளாக மாற்றிவிடும்.
எனவே, முடிந்தவரை கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.
அதேபோல், தான் சொல்வதைத்தான் மற்றவர்கள்
கேட்க வேண்டும் என்ற ஆதிக்க குணமும் பல நேரங்களில் தலை எடுக்கும். அதை
அவ்வப்போது தட்டி வைக்க வேண்டும். இல்லை என்றால், நல்ல வாய்ப்புகளை இழக்க
வேண்டிய சூழல் உருவாகும்.
உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்களும், கண்
பாதிப்புகளும் இவர்களுக்கு உண்டு. அதனால், உடலில் சூடு ஏறாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும். அதேபோல், கண்களை அடிக்கடி பரிசோதித்து கொள்வது நல்லது.
சிம்ம ராசிக்காரர்கள் பல பேருக்கு காதல்
கைகூடும். ஆனால், இல்லற வாழ்க்கை போகப்போக கசக்க ஆரம்பித்து, கடைசியில்
ஆன்மீக வாதியாக மாறி விடுவார்கள்.
சிம்ம ராசி, சிம்ம லக்னத்துக்கு
அதிபதியான சூரியன் வலுவாக இருந்தால், இவர்கள் வாழ்க்கை முழுவதும்
கம்பீரமா இருப்பார்கள். வலுவிழந்தால், மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து
போக வேண்டி இருக்கும்.
இவர்களுக்கு பெரிய அளவுக்கு பண கஷ்டம்
இருக்காது. பேச்சில் கூட லாப நோக்கமே மேலோங்கி இருக்கும். இவர்கள் கையால்
காசு வாங்கினால், காசு சேரும்.
கலை வண்ணம் மிகுந்த கைத்தொழில் ஏதாவது ஒன்றை
இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். தொழிலில் நேர்த்தியை விரும்பும்
இவர்கள், வசிக்கும் இடத்தையும், தொழில் செய்யும் இடத்தையும்
சுத்தமாக, அழகாக வைத்திருப்பார்கள்.
இவர்களுக்கு வீடு, மனை, வாகனம் என அனைத்தும்
அமைந்தாலும், அதில் திருப்தி அடைய மாட்டார்கள். ஏனென்றால், இவர்களின்
எதிர்பார்ப்பு, அதைவிட அதிகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் இவர்களுக்கு
பெரிய திருப்தி இருக்காது.
எதிர்பார்த்தது போல, வாழ்க்கை துணை அமைவது
கஷ்டம். பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்கள், மனைவி விஷயத்தில் பெரிய அளவில்
திருப்தி அடைவதில்லை.
மொத்தத்தில், எல்லாம்
அமைந்தும், எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதால், எதிலும் திருப்தி அடையாத
நிலையில் இருப்பவர்களே சிம்ம ராசிக்கார்கள்.
தடைகள் அகல – அதிர்ஷ்டம் பெருக
சிம்ம ராசிக்காரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, புதனுக்கு உரிய பச்சை நிற துணியை கைக்குட்டையாக பயன்படுத்தலாம்.
கடன், வம்பு, வழக்கு போன்ற தடைகள்,
இடையூறுகளை கட்டுப்படுத்த சிவப்பு நிற ரிப்பனை, செவ்வாய்க் கிழமைகளில்
கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டி போடலாம்.
முக்கியமான நிகழ்ச்சிகள், நேர்முக தேர்வுகள்,
பிசினஸ் மீட்டிங் போன்றவற்றில் கலந்து கொள்வதற்கு முன்பாக, கொஞ்சமாவது
உணவு அருந்தி செல்வது நன்மை பயக்கும் என்று லால் கிதாப் கூறுகிறது.
மேலும், செம்பு நாணயம் அல்லது டாலரை நூலில்
கோர்த்து எப்போதும் கழுத்தில் அணிந்து கொள்வது, தொழில் நிலையில் நல்ல
மாற்றத்தை, உயர்வை தரும்.
கண் பார்வையற்ற பத்து பேருக்கு ஞாயிற்று கிழமைகளில் இனிப்பு பண்டங்கள் வாங்கி கொடுக்கலாம்.
உங்கள் வசதிக்கும், பொருளாதார நிலைக்கும்
ஏற்ற வகையில், சேவை அமைப்பு அல்லது அன்னதானம் செய்யும் அமைப்பிற்கு அரிசி
மற்றும் பாலை வழங்கலாம்.
யார் அன்பளிப்பாக எதை கொடுத்தாலும், அதற்கு
பதிலாக ஒரு சிறு பொருளாவது பதிலுக்கு கொடுத்துவிட்டு பெற்றுக்கொள்ள
வேண்டும். அதன்மூலம் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.
மது மற்றும் மாமிசத்தை முற்றிலும் துறத்தல் நல்லது.
ஏழு வகையான தானியங்களை ஒரு சிவப்பு துணியில்
வைத்து முடிந்து, அதை தலைமாட்டில் வைத்து படுத்துக் கொள்ளவும். மறுநாள்
காலை அதை எறும்புகளுக்கு போடவும். சனிக்கிழமை தோறும் இதை செய்தால், பித்ரு
தோஷம் நீங்கும், தடைகள் அகலும்.
இவை அனைத்தும் சிம்ம ராசிக்கான பொதுவான பலன்களே. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள் மாறுபடும்.
No comments:
Post a Comment