Tuesday, 15 October 2019

மிதுன ராசி

நெளிவு சுளிவு அறிந்த மிதுனம் 

ஆண் பெண் சங்கமத்தையும், இரட்டை தன்மையையும், நெளிவு சுளிவு அறிந்து அதற்கேற்ப செயல்படும் தன்மை மிக்கவர்கள் மிதுன ராசியில் பிறந்தவர்கள்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தின் மூன்று மற்றும் நான்காம் பாதங்கள், திருவாதிரையின் நான்கு பாதங்கள் மற்றும் புனர்பூசத்தின் முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசியை சேர்ந்தவர்கள்.
இது உபய ராசி என்பதால், சில நேரங்களில் அலைந்து திரிந்தும், சில நேரங்களில் நிலைத்து நின்றும் செயல் படும் இரட்டை குணம் மிகுந்திருக்கும்.
எப்போதும் இரண்டு விதமான மன நிலை, இரண்டு வேலை, இரண்டு, வருமானம், இரண்டு அலுவலகம் என மிதுன ராசி, மிதுன லக்ன காரர்களுக்கு எல்லாமே இரண்டு, இரண்டாகத்தான் அமையும்.
ஆசிரியர் வேலைக்கு சென்றாலும், மறுபக்கம் டியூஷன் சொல்லி கொடுப்பது, ஏல சீட்டு நடத்துவது, புத்தகம் எழுதுதல், புத்தகம் வெளியிடுதல், ஏதாவது கமிஷன் தொழில் செய்தல் என மிதுன ராசிக்காரர்கள் ஓய்வின்றி செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.
சாப்பிடும்போது கூட, சட்னியை சாம்பாருடன் கலந்து சாப்பிடுவது, சாம்பாருடன் மோரை கலந்து சாப்பிடுவது என இவர்களின் டேஸ்டே வேறு விதமாக இருக்கும்.
மிதுன ராசிக்காரர்கள் பல பேருக்கு சாப்பிட்ட பின்னர் குளிக்கும் பழக்கம் இருக்கும். அதே போல், இவர்களிடம் எந்த ரகசியமும் தங்காது. யாராவது எதையாவது சொன்னால், அதை மற்றவர்களிடம் சொன்னால்தால் இவர்களுக்கு தூக்கம் வரும்.
ஆடல் வல்லானான சிவ பெருமான், இந்த ராசியில் பிறந்ததாலும், கலைவாணியின் அருளைப்பெற்றதாலும், இவர்களுக்கு ஆடல், பாடல், இசை, கல்வி என அனைத்தும் சிறப்பாக வரும்.
இந்த ராசிக்கு அதிபதி புதன் என்பதால், அனைவரையும் எளிதாக அணுகுவது இவர்களுக்கு கைவந்த கலையாக இருக்கும்.
எந்த சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல, தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை, அனைத்து தரப்பினரிடமும் சுமூகமாக அணுகும் தன்மை இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
நகைச்சுவை உணர்வு இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். எதையும் எளிதாக புரிந்து கொள்ளுதல், இறுக்கமான சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்றுதல் போன்றவற்றில் இவர்களுக்கு நிகர் இவர்களே.
மார்கெட்டிங், கமிஷன் தொழில்கள், தூதரக பணிகள், ஒப்பந்த பணிகள், தகவல் தொடர்பு பணிகள், எழுத்து, விளம்பரம், சமரசம் செய்தல் என அனைத்திலும் மிதுன ராசிக்காரர்கள் ஜொலிப்பார்கள்.
கூடுமானவரை அமைதியாகவும், சமாதானமாகவும் போகவே இவர்கள் விரும்புவார்கள். இவர்களின் அமைதியை கோழைத்தனமாக நினைத்துவிட்டால், அதன் விளைவு கடுமையாக இருக்கும்.
இது ஆண் பெண் சங்கமத்தை குறிக்கும் ராசி என்பதால், இவர்கள் வீட்டு தோட்டத்தில்தான், அணில். பூனை, பறவைகள் என அனைத்து ஜீவ ராசிகளும் இனப்பெருக்கம் செய்யும். அதனால், சிறு விலங்குகள் மற்றும் பறவைகளின் நடமாட்டம் இவர்கள் வசிக்கும் இடத்தில் சற்று அதிகமாகவே இருக்கும்.
மிதுன ராசிக்காரர்களின் வீடு பெரும்பாலும், வீதி திரும்பும் இடம், முட்டு சந்து, பூங்கா, பாலர் பள்ளிகள் ஆகியவற்றின் அருகிலேயே அமைந்திருக்கும். கூடுமானவரை வீட்டில் பச்சை பசேல் என மரம் செடி கொடிகள் நிறைந்திருக்கும்.
இரட்டை நகரங்கள், இரட்டை கோபுரங்கள், இரட்டை பெயர்கள் என அனைத்திலும் மிதுனத்தின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்.
மிதுனமே கல்வியை குறிக்கும் ராசி என்பதால, மிகச்சிறந்த கல்வியாளர்கள் எல்லாம் இந்த ராசியில் அதிகம் இருப்பார்கள்.
கடன் வாங்கினால் அது பெருகிக் கொண்டே போகும். அதனால் கடன் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மனைவி, தொழில், வேலை விஷயம் எல்லாம் கூடுமானவரை  திருப்திகரமாக அமையும். தந்தையின் அரவணைப்பு முழுமையாக கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், அதை சரிவர பயன்படுத்திக் கொள்ள முடியாது.
மொத்தத்தில், கல்வியாலும், சமாதானத்தாலும், தரகாலும், தகவல் தொடர்பாலும் முன்னுக்கு வருபவர்கள் மிதுன ராசிக்காரர்கள். மண்ணையும் பொன்னாக்கும் மார்க்கெட்டிங் ரகசியம் அறிந்தவர்கள்.
இவை அனைத்தும் மிதுன ராசிக்காரர்களுக்கான பொது பலன்களே. அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறுபடும்.
தடைகள் அகல – அதிர்ஷ்டம் பெருக
மிதுன ராசிக்காரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள,  சுக்கிரனுக்கு உரிய வெள்ளை துணியை கைக்குட்டையாக பயன்படுத்தலாம்.
கடன், வம்பு, வழக்கு போன்ற தடைகள், இடையூறுகளை கட்டுப்படுத்த சிவப்பு நிற ரிப்பனை செவ்வாய் கிழமைகளில் கத்தரிக்கோலால துண்டு துண்டாக வெட்டி போடலாம்.
முடிந்தவரை மீன்களுக்கு பொரி அல்லது இரை போடுதல் நல்லது என்று லால் கிதாப் கூறுகிறது.
மேலும், புனித யாத்திரை தளங்களுக்கு பால் மற்றும் அரிசியை தானமாக வழங்கலாம். ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளை வாங்கி தருவது நன்மை பயக்கும். மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க கூடாது.
 இவை அனைத்தும் மிதுன ராசிக்கான பொதுவான பலன்களே. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

No comments:

Post a Comment