Tuesday, 15 October 2019

உத்திர நட்சத்திர பலன்கள்


எதையும் கம்பீரமாக அணுகி சாதுர்யமாக முடிக்கும் திறன் கொண்டவர்கள் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
வில்லுக்கு விஜயன் என்று புகழப்படும் மகாபாரத அர்ஜுனன் பிறந்த நட்சத்திரம் என்ற பெருமைக்கு உரியது உத்திர நட்சத்திரம். டே, டோ, ப, பி போன்ற எழுத்துக்களை, பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், உத்திர நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே.
உத்திர நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசியிலும், எஞ்சிய மூன்று பாதங்கள் கன்னி ராசியிலும் இடம் பெற்றுள்ளன. எனவே உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனுக்கு உரிய கம்பீரமும், புதனுக்கு உரிய சாதுர்யமும் நிறைந்திருக்கும்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியான வாழிக்கையை வாழ விரும்புபவர்கள். அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். தெளிவான நடவடிக்கைகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் கொண்டவர்கள்.
தாம் மேற்கொண்ட பணிகளில் கருத்தூன்றி, உண்மையான சிரத்தையுடன் செய்யும் பண்பு உடையவர்கள். கடவுள் மற்றும் மத கோட்பாடுகளிலும் பற்று நிறைந்திருக்கும். பொது மக்களுக்கு சேவை செய்வதிலும் ஆர்வம் அதிகம் இருக்கும்.
அர்ஜுனனுக்கு கிருஷ்ணரை போல, இவர்களுக்கு ஒரு நல்ல குரு அமைந்து விட்டால், வாழ்க்கையில் தொட முடியாத தூரத்திற்கு உயர்ந்து விடுவார்கள்.  எதாவது ஒரு வீர விளையாட்டிலோ அல்லது ஏதாவது ஒரு கலையிலோ இவர்கள் திறமைசாலிகளாக இருக்கார்கள்.
இவர்கள் பல நேரங்களில் சகிப்பு தன்மை இல்லாமல் நடந்து கொள்வார்கள். ஆனாலும் அதை நினைத்து பின்னால் வருத்தப்படுவார்கள். ஆனாலும், இவர்களின் கோபத்திற்கு பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், அமைதியான, எளிமையான குணத்தை கொண்டவர்கள். ஒருவருடன் பகை ஏற்பட்டால், பல ஆண்டுகளுக்கு அதை மறக்க மாட்டார்கள். எப்போதும் சந்தோஷமான மன நிலையும், உறுதியான கொள்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பலர், இடது கையை பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். அதேபோல், கொடுத்த கடனை, கண்டிப்பாக வசூலிக்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது இரக்க குணமே இவர்களுக்கு பலவீனமாக அமைந்து விடும்.
உத்திர நட்சத்திரத்தில் நின்ற கிரகம், இடது கை பழக்கம், வசூலிக்க முடியாத வாடகை, வசூலிக்க முடியாத கடன், பயன்படுத்தாத சொத்துக்கள் போன்றவற்றை சொல்லும்.
உத்திர நட்சத்திரத்தின் அதிதேவதை சூரியன், பரிகார தெய்வம் சிவன். மதுரை அருகில் அழகர் கோவிலில் உள்ள ஸ்ரீ ராம தேவர் ஜீவ சமாதி, திருப்பரங்குன்றம் ஸ்ரீ மச்சமுனி ஜீவ சமாதி ஆகியவற்றையும் வணங்கலாம். உகந்த மலர் கதம்பம்.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் அலரி மரம். எனவே உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலரி மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அதற்குரிய வடிவமான கட்டில் கால்கள் மற்றும் மெத்தையை, தொழில் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்தலாம்.
மனுஷ கணம் கொண்ட உத்திர நட்சத்திரத்தின் மிருகம் ஆண் எருது, பறவை மரம்கொத்தி. எனவே இவற்றுக்கு இடையூறு செய்யக் கூடாது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்களம் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் உடனுறை மங்களாம்பிகை திருக்கோயிலே உத்திர நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று மேற்கண்ட ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நல்லது.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, எள் தானம் செய்வது நல்லது.

No comments:

Post a Comment