Tuesday, 24 September 2019

ஆறு கிரக சேர்க்கையும் 537 வருட புருடாவும்


ஆறு கிரக சேர்க்கையும் 537 வருட புருடாவும்
=========================================
சோஷியல் மீடியா என்னும் சமூக வலைத்தளங்களாகிய முகநூல், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் பகிரக்கூடிய தகவல்களில் ஒன்றிரண்டு தவிர பெரும்பாலானவை பொய்யான தகவல்களாகவே இருக்கின்றன. சமீபத்தில் குழந்தை கடத்துபவர்கள் பற்றிய பொய்யான தகவல்களால் பல இடங்களில் அப்பாவிகள் பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்களே இதற்கு உதாரணமாகும்.
.
இதுபோன்ற பொய்த் தகவல்கள் மற்ற எல்லாவற்றையும் விட ஜோதிடத்தில் மிக அதிகமாகப் பரப்பப்படுகிறது. சமீப காலங்களில் ஒரு வதந்தி மிக வேகமாகப் பரவியது. வரும் அக்டோபர் மாதத்தில் 5 திங்கள்கிழமை 5 செவ்வாய்கிழமை வருகிறது என்றும் வரும் ஜனவரி மாதத்தில் 5 புதன்கிழமை, 5 வியாழக்கிழமை வருகிறது என்றும், இது மிகவும் அபூர்வமானது என்றும் 827 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் வருவதாகவும் கதையளக்கிறார்கள். யோசித்துப் பாருங்கள். 31 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில், 7 நாட்கள் கொண்ட 4 வாரங்களும், 5வது வாரத்தில் 3 நாட்களும் இருக்கும். அப்படியானால் அந்த மாதத்தில் 3 கிழமைகள் 5 முறை வருமல்லவா? 30 நாட்கள் கொண்ட மாதத்தில் 2 கிழமைகள் 5 முறை வருமல்லவா? இதில் என்ன ஆச்சரியம்?!! அல்லது அபூர்வம். ஒவ்வொரு வருடத்திலும் ஜனவரி,மார்ச்,மே, ஜூலை,ஆகஸ்ட்,அக்டோபர்,டிசம்பர் ஆகிய மாதங்களில் 3 கிழமைகள் 5 முறை வருமே. இதற்கு எதற்கு 827 வருடம் காத்திருக்க வேண்டும்?. இதைக்கூட யோசிக்காமல் இந்த தகவலை பலரும் உண்மை என்று நம்பி Share செய்கிறார்கள். ஜோதிடர்கள் கூட இந்த தகவலை Share செய்வது தான் கொடுமையிலும் கொடுமை.
-
தற்போது வேறு ஒரு வதந்தியை ஜோதிடர்களே பரப்புகிறார்கள். என்ன தெரியுமா? வரும் டிசம்பர் மாதம் தனுசு ராசியில் ஆறு கிரகங்களின் சேர்க்கை ஏற்படுகிறதாம். அது 537 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் ஏற்படுகிறதாம். இது மிகவும் அபூர்வமானதாம். இதனால் நாட்டிற்கு அப்படியிருக்கும் இப்படியிருக்கும் என்றும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் இன்னின்ன பலன்கள் நடக்கும் என்றும் ஆளாளுக்கு கதைவிட ஆரம்பித்து விட்டார்கள். யூடியூப்பில் பல ஜோதிட ஜாம்பவான்கள் காணொளி மூலம் பலன்களை மனதிற்கு தோன்றியபடி சொல்லி வருகிறார்கள்.
-
உண்மையிலேயே இதுபோல் தனுசு ராசியில் ஆறு கிரகச் சேர்க்கை 537 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் ஏற்படுகின்றதா? இது அபூர்வமானது தானா என்பதை எந்த யூடியூப் ஜோதிடராவது ஆராய்ச்சி செய்தாரா? இந்த தகவல் உண்மை தான் என்பதை யாராவது நிரூபிக்க முடியுமா?
-
இந்த தகவலை நான் ஆய்வு செய்து பார்த்தேன். அப்போது தான் இது எவ்வளவு பெரிய பொய் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. முதலில் இவர்கள் சொன்னார்களே 537 வருடத்திற்கு முன் என்று, அதாவது 1482 ஆம் வருடம் என்று, அந்த வருடத்தில் தனுசு ராசியில் 6 கிரக சேர்க்கை எதுவும் ஏற்படவே இல்லை. அதுமட்டுமல்ல அந்த நூற்றாண்டிலேயே அதாவது 1400 வருடம் முதல் 1500 வருடம் வரையிலான நூறு வருடத்தில் ஒருமுறை கூட அவ்வாறு 6 கிரகச் சேர்க்கை தனுசு ராசியில் ஏற்படவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் 1378 ஆம் ஆண்டிற்குப் பிறகு 1536 வரை 158 ஆண்டுகள் தனுசு ராசியில் அப்படி 6 கிரகச் சேர்க்கை ஏற்படவில்லை.
-
சரி. வேறு எப்போது தான் ஏற்பட்டது? கடந்த 56 ஆண்டுகளுக்கு முன் 1963ஆம் வருடம் டிசம்பர் மாதம் 17,18 தேதிகளில் தனுசு ராசியில் 6 கிரக சேர்க்கை ஏற்பட்டது. 1962ல் மகரத்தில் 8 கிரகச் சேர்க்கை ஏற்பட்டது. அதற்கு முன் 1870,1842,1834,1783,1758,1723 என கடந்த 300 வருடங்களில் மட்டும் 7 முறை தனுசு ராசியில் 6 கிரக சேர்க்கை ஏற்பட்டிருக்கிறது.கடந்த 2000 ஆண்டுகளில் இதுபோல் எந்தெந்த வருடத்தில் ஏற்பட்டிருக்கிறது என்பதை தனி அட்டவணையாக கொடுத்திருக்கிறேன்.
-
இப்போது உங்களுக்கு இன்னொரு சந்தேகம் எழலாம். இந்த 6 கிரக சேர்க்கை தனுசு ராசியில் மட்டும் தான் ஏற்படுமா? வேறு ராசிகளில் ஏற்படாதா?. அப்படி எதுவும் சமீப காலங்களில் ஏற்பட்டிருக்கிறதா?.
கண்டிப்பாக ஏற்பட்டிருக்கிறது. கடந்த 1900 முதல் 2020 வரையான 120 வருட காலங்களில் மட்டும் மேஷம், ரிஷபம்,கன்னி,மகரம் ஆகிய ராசிகளில் தலா 3 முறையும், சிம்மம் மற்றும் கும்பத்தில் தலா 1 முறையும், துலாத்தில் 2 முறையும் ஏற்பட்டிருக்கிறது. மிதுனம், கடகம், விருச்சிகம், மீனத்தில் ஒருமுறை கூட ஏற்படவில்லை.
-
உண்மை இவ்வாறு இருக்க 537 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் அபூர்வ 6 கிரக சேர்க்கை என்ற பொய்யான வதந்தியைப் பரப்பும் பொய்யர்களை என்ன செய்யலாம்?

No comments:

Post a Comment