Thursday, 1 June 2017

திருமணப்பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டியவை

                திருமணப்பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டியவை


திருமணப்பொருத்தம் பார்க்கும்போது இரண்டு கிரகங்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதில் ஒன்று சூரியன் மற்றொன்று சூரியனின் பிள்ளையான சனியாகும்.
ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7ல் சூரியன் இருந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். விருச்சிக லக்கினக்காரர்களைத்தவிர பிற லக்கினக்காரர்களுக்கு 7ல் உள்ள சூரியன் திருமண வாழ்வில் பிரிவினையைத்தந்து விடுகிறது. உதாரணமாக துலாம் லக்கினத்தை எடுத்துக்கொண்டால் 11க்குடைய சூரியன் 7ல் உச்சம் என்று கொண்டாடவேண்டாம். 11மிடத்து லாபாதிபதி கூட்டுத்தொழிலில் லாபத்தைத்தரலாம், ஆனால் சர லக்கினமான துலாத்திற்கு பாதகாதிபதியாகி 7ல் இருந்து களத்திர பிரிவினையை தந்து விடுகிறார். மேலும் சனியும் செவ்வாயும் சேர்ந்து தங்களது பார்வையை 7மிடத்தில் வீசினால் முடிவு சோகம்தான்.
மேச லக்கினத்திற்கு 7ல் சூரியன் நீச்சமாகி ராகுவின் நட்சத்திரமான சுவாதியில் நிற்க , அவரை குரு பார்க்காமல் இருந்தால் அவர்களது திருமண வாழ்வில் முறிவு ஏற்ப்பட்டுவிடுகிறது.
மீன லக்கினத்திற்கு 6க்குடைய சூரியன் 7ல் இருந்தால் பிரிவினையைத்தராமல் மனைவியால் ஏச்சையும்,பேச்சையும் கேட்டு வெட்கி தலை குனிந்து வாழவேண்டும். இங்கு பிரிவினை தராத காரணம், உபய லக்கினத்திற்கு பாவிகள் உபயம் ஏறினால் நல்லவர்களாக மாறிவிடுவதுதான். ஆனால் மனைவியின் திட்டுதலும், வசைபாடுகளும் குறையாது. மேலும் சூரியன் உத்திரம் நட்சத்திரத்திலிருந்தால் கேட்கவே வேண்டாம். மனவியின் வசை பாடுதலை கேளுங்கள்,கேளுங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள். எனவே மணமகன் ஜாதகத்தில் சூரியன் 7மிடத்தில் இருந்தால் அவர் யாருடன் சேர்ந்து இருக்கிறார், அவர் பாபரா,சுபரா? அவர் இருக்கும் சாரமென்ன ? யாரால் பார்க்கப்படுகிறார் என்று சீர்தூக்கி பார்த்து பொருத்தவும். இங்கே எனது ஆசான் சித்தயோகி சிவதாசன் ரவி அவர்களின் கருத்தை கூற விரும்புகிறேன். 7ல் இருக்கும் சூரியன் ஏன் மண வாழ்க்கையில் பிரிவினை கொடுக்கிறது என்று வினவியபோது, காலச்சக்கரப்படி 7ல் சூரியன் நீச்சமடைவதால் , எந்த லக்கினமாக இருந்தாலும் நீச்சமடைவதாக கொள்ளவேண்டும், அதுதான் பிரிவினையைத்தருகிறது.
அடுத்து சனியின் திருவிளையாடல்களைப்பார்ப்போம். ஆண் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 3ல் சனி இருந்தால், மணமகன் திருமணமாகி மாமனார் வீட்டிற்கு மாப்பிள்ளையாய் போய் சேர்ந்து ஒரு சில மாதங்களில் மரணமடைவது அல்லது படுத்த படுக்கையாகிவிடுவது அல்லது இருந்தும் இல்லாமல் போவது, இப்படி ஏதாவது ஒன்று ஆகிவிடுகிறது. 3ல் சனி என்னும்போது , 3மிடம் 7மிடத்திற்கு 9மிடமாகி , அது மனைவியின் தந்தையாகி ,மாமனாரை குறிக்கிறது. அதில் சனி அமர அவரை தீய கிரகங்கள் பார்க்க , விளைவு மாமனாருக்கு ஆபத்தாக முடியும்.
என் அனுபவத்தில் கண்ட ஒரு ஜோடி, அதில் மணமகன் ஜாதகத்தில் துலாம் லக்கினத்திற்கு 3ல் சனி அமர்ந்திருந்தார். திருமணமான சில மாதங்களில் மாமனார் இறந்துவிட்டார். எனது ஆசான் மறைந்த K.A. இராமன், BA விடம் இது பற்றி கேட்கும்போது, மூல நட்சத்திரத்தை விட, 3ல் உள்ள சனி உடனே மாமனரை முழுங்கிவிடும் என்றார். அதே 3ல் உள்ள சனியை குரு பார்த்தால் உயிர் இருந்தும் ஒன்றுக்கும் உதவாமல் இருப்பார். 3ல் இருக்கும் சனியின் வேலை பலவாக இருந்தாலும் ,திருமானப்பொருத்தத்தில் 3ல் சனி நின்றால் நிறைய யோசனை செய்து ஜாதகத்தை ப்பொருத்தவேண்டும். இந்த விதிக்கு எனது ஜாதகமே உதாரணமாகும். மிதுன லக்கினத்திற்கு 3ல் சனி நின்று குருவால் பார்க்கப்பட்டதால் நான் மாப்பிள்ளையாக சென்ற சில வருடங்களில் சுறுசுறுப்பான மனிதன் வீட்டோடு முடங்கி , பின் கட்டிலோடு முடங்கி வாழ் நாளை கழித்தார். உயர்ந்த உள்ளம்கொண்ட அவர் எனது ஜாதகத்தால் பாதிக்கப்பட்டபோது ,அன்றிலிருந்து இன்று வரை மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது.
எனவே பத்துப்பொருத்தம் மட்டும் பார்க்காமல் , 7ல் சூரியன் ,3ல் சனி இருப்பதைக்கவனித்து அலசி ஆராய்ந்து பொருத்தவும். தீய கிரகங்கள் 3ல் இருந்தால் ,உதாரணமாக 3ல் கேது நின்றால் மாமனாரின் முயற்சிகள் அனைத்தும் தடைப்பட்டு நடமாடும் பிணமாகத்தான் திரியவேண்டும்.
(பாரம்பரிய ஜோதிடத்தில் நல்ல ஞானமும் முப்பது வருடங்களுக்கு மேலான அனுபவங்களும் இருந்தும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதவர் ஐயா திரு சண்முகவேல் அவர்கள். சமீபத்தில் அவரை ஜோதிட கட்டுரை எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டேன். அவர் எழுதிய கட்டுரைகளில் ஒன்றுதான் இக்கட்டுரை)

No comments:

Post a Comment