ஜோதிட சாஸ்திர சூட்சுமங்கள்
1. உடலாதிபதி என்பவர் சந்திரன்தான். அவர்தான் தோற்றங்களுக்குரிய கிரகம்,தோற்ற அமைப்பிற்கு உரிய கிரகம். உதாரணத்திற்குச் சுக்ரன் நன்றாக இருக்கிறாரென்றால், அவர்களது கண்கள் காந்தமாகவும், கனிவானதாகவும் இருக்கும். அவர்கள் சும்மா போய்க் கொண்டிருந்தால் கூட, என்ன சார்? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்று பேச வைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
2. கண்களெல்லாம் சுக்ரன் நன்றாக இருந்தாரென்றால், அந்த ஒளி அவர்களிடம் இருக்கும். அவர்களெல்லாம் பெரிதாக ஒன்றும் நம்மிடம் பேச வேண்டும் என்று அவசியமே இருக்காது. சும்மா அப்படிப் பார்த்து கண் சிமிட்டினாலே போதும் நாம் விழுந்துவிடுவோம். அந்த மாதிரி இருப்பார்கள்.
3. சந்திரனும் வலுவாக இருக்க வேண்டும். சந்திரன்தான் முகத் தோற்றம், முகப்பொலிவு, அந்த உருண்டை முகம், அந்த முகத்திற்குத் தகுந்த மாதிரி மூக்கு, கண், காது எல்லாம் செதுக்கி வைத்திருக்கிறது என்று சொல்வார்களே, அதெல்லாம் சந்திரன்தான்.
4.லக்னாதிபதி, உதாரணத்திற்கு மேஷ லக்னம் என்றால் அதிகமான உயரமாக இருக்க மாட்டார்கள். சராசரி உயரம், பருத்த தேகம் அல்ல. ஒல்லியாகவும் இல்லாமல் உயரத்திற்கு ஏற்ற சதைப்பிடிப்புடன் இருப்பார்கள்.
5. அங்க லட்சணங்கள் ஒவ்வொரு நட்சத்திர ராசிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அதுபோலத்தான் இருப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் என்றால் சராசரி உயரம், அதற்கும் மேலாக இருப்பார்கள்.
6. மிதுனம், கன்னி இதெல்லாம் புதன் ராசி. இவர்களுக்கு மூக்கின் நுனி கொஞ்சம் உருண்டையாக இருக்கும். குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு மிளகாய் மூக்கு இருப்பதைப் பார்க்கலாம்.
7. துலாம், சிம்மம், மகரம் ராசிக்கார்களைப் பார்த்தீர்களென்றால், மூக்கு நீளமாக இருக்கும். தனுசு, மீனம் ராசிக்காரர்களுக்கு பதுங்கி, ஒரு மாதிரி மடிந்து, அதாவது ஊர் பக்கத்திலெல்லாம் பெருமாள் மூக்கு என்று சொல்வார்கள் அந்த மாதிரி இருக்கும்.
8. சாமுத்திரிகா லட்சணத்தில் பிரதானம். நாசி, கண்கள், நெற்றி அமைப்பு. நெற்றியில் இருக்கும் கோடுகளையெல்லாம் வைத்துச் சில விஷயங்களைச் சொல்லிவிடலாம்.
. 9. சனி லக்னத்தையோ, ராசியையோ பார்க்கிறதென்றால் கோடுகள் நெற்றியில் வர ஆரம்பித்துவிடும்.
10. புதன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் மெல்லிய மற்றும் நீளமான விரல்களாக இருக்கும். அவருடைய கையைப் பார்க்கும் போதே, அவர் ஜாதகத்தில் புதன் உச்சமாக இருக்கிறார் என்று சொல்லிவிடலாம்.
11. நட்சத்திரம் என்பது என்ன?ஒரு மனிதனை அறிமுகம் செய்வது நட்சத்திரம். இந்த உலகத்திற்கு நான் இந்த நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்றுஉரைப்பது ஒருவருடைய நட்சத்திரம்தான்.
12.திருமணத்திற்கு நட்சத்திரப் பொருத்தம் என்பது ஒரு தொடக்கம். 21பொருத்தங்கள் பார்ப்பார்கள், அதன் பிறகு 15 பொருத்தங்களாக மாற்றினார்கள், இப்போது 10 ஆகக் குறைத்து விட்டார்கள்.
13. திருமணத்திற்குப் பார்க்கப்படும் பொருத்தங்களில் தினப் பொருத்தம், கனப் பொருத்தம்,யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ஆகிய ஐந்தும்தான் அடிப்படையானது. இதன் அடிப்படையில்தான் மற்ற பொருத்தங்கள் எல்லாம் பார்க்கப்படுகிறது.
14. நட்சத்திரப் பொருத்தத்தைப் பார்த்துவிட்டு ஜாதகப் பொருத்தத்தைப் பார்க்காமல் இருந்து விடலாகாது.
15. பத்துப் பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்துவைத்த பத்தாவது நாளிலேயே விவாகரத்து செய்து கொண்டவர்களை எல்லாம் கூட நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.
16. தினப் பொருத்தம் என்பது என்ன?தினந்தோறும் இவர்களிடையே நடைபெறும் சம்பாஷனைகள், அதாவதுஉரையாடல்கள். கணவன் ஒரு கேள்வி கேட்டால், அதற்கு மனைவி சொல்லும் பதிலும், மனைவி ஒரு கேள்வி கேட்டால் அதற்கு கணவன் சொல்லும் பதிலும் முக்கியமானது. அப்படிக் கேட்கும்போது பாந்தமாக ஒருவருக்கு ஒருவர் பதில் கூற வேண்டும்.
17. லக்னத்தின் இரண்டாவது வீட்டில் 6க்குஉரியவர், 8க்கு உரியவர் இருந்தால், அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதே ஒரு முரண்பாடாக இருக்கும். அதாவது கணவர் கேட்பது ஒன்றாகவும், மனைவி கூறும் பதில் வேறாகவும் இருக்கும். அது எரிச்சலூட்டும். எனவேதான் ஜாதகப் பொருத்தம் என்பது மிகுந்த அவசியமாகிறது.
18. நட்சத்திரப் பொருத்தம் என்பது அவர்கள் இருவரை மட்டும் சார்ந்தது, ஆனால், ஜாதகப் பொருத்தம் என்பதுஅவர்களுடைய உறவுகள் நிலை பற்றி உரைக்கக் கூடியது. மாமனார், மாமியார், நாத்தனார் போன்றவர்களோடு அனுசரித்துப் போவார்களா என்பதைக் கண்டறிய ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம். எனவே இந்த இரண்டிற்குமே நாம் முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க வேண்டும்.
19. ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைப்பிடிப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம்.
20. கன்னி ராசிக்காரர்கள் எப்போதுமே காதலித்துக் கொண்டிருப்பவர்கள்.
21. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால், அந்த ஜாதகர், தான் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார்.
22. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் மோசமாக இருந்தால் காதலில் தோல்வி, திருமணத்திற்கு பின் குறுகிய காலத்தில் பிரிவு போன்ற சம்பவங்கள் ஏற்படும்.
23. பொதுவாக எந்த லக்னம்/ராசியாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்றழைக்கப்படும் 7, 8ஆம் வீடுகளைக் கொண்டே எந்த வகையான திருமணமும் அமையும் எனக் கூற வேண்டும்.
24. ஒருவருக்கு 7, 8ஆம் அதிபதி நல்ல நிலையில் இருந்து பாவக் கிரகங்களின் பார்வை/சேர்க்கை இல்லாமல் இருந்தால் அவருக்குப் பெற்றோர் பார்க்கும் வரன் துணைவராக அமைவார்.
25. களஸ்திர ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் வலுவாக இருந்தால் நெருங்கிய உறவிலேயே (அத்தை, மாமன் முறையில்) திருமணம் நடைபெறும்.
26. ஜோதிட ரீதியாக ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னம்/லக்னாதிபதி அல்லது சந்திரனைக் குரு பார்த்தால், அவருக்குப் பிறக்கும் குழந்தை அவருடையதுதான் என உறுதியாகக் கூற முடியும்.
27. பூர்வ புண்ணியாதிபதியை குரு பார்த்தாலும், அந்த ஜாதகர் குழந்தையின் பிறப்பில் களங்கம் இருக்காது. இதுபோல் பல வகையான அமைப்புகள் மூலம் ஒரு குழந்தை அந்த ஜாதகருக்குதான் பிறந்தது என்று ஜோதிட ரீதியாக உறுதிபடக் கூறிவிட முடியும்.
28. நவகிரகங்கள் மற்றும் அவற்றின் காரகத்துவம் பற்றி ஜோதிடத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.உதாரணமாக, சூரியனை எடுத்துக் கொண்டால் அவர் ஆத்மா, பிதுர், அரசாங்கம், அரசியல், இதயம் ஆகியவற்றில் ஆற்றல் செலுத்துவார்.
29. ஜோதிட ரீதியாகப் பார்த்தால் ஒரு கிரகம் குறிப்பிட்ட நபரின் ஜாதகத்தில் சிறப்பாக இருந்தால், அதன் காரகத்துவம் முழுமையாகக் கிடைக்கும். அதே கிரகம் கெட்டுப்போய் இருந்தால், அது வழங்கும் பலன்களும் கெடுதல் பயக்கும்.
30. உதாரணமாக, செவ்வாய் கிரகம் ரத்தத்திற்கும், விபத்திற்கும் உரியது. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய், சனி பார்வை பெற்றிருந்தாலும், செவ்வாய்+சனி சேர்க்கை பெற்றிருந்தாலும் அவருக்கு அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட ஜாதகர் தாமாகவே முன்வந்து ரத்ததானம் செய்யலாம். இதன் மூலம் விபத்தால் ரத்த இழப்பு ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.
31. ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் (7, 8ஆம் இடம்) சிறப்பாக இல்லாமல், சுக்கிரனும் கெட்டுப் போய் இருந்ததால் அவருக்கு மண விலக்கு பெற்ற பெண்ணை திருமணம் செய்வதே சிறந்த பரிகாரமாக அமையும்.
32. லக்னாதிபதி லக்னத்தில் இருந்து, வாக்கு அதிபதி வாக்கு ஸ்தானத்தில் இருப்பது போன்ற அமைப்பைப் பெற்ற குழந்தைகளுக்கு, நல்ல தசாபுக்தி நடைபெறும் போது நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எளிதாகப் பெறுவார்கள். தடைகள் ஏற்படாது.
33. குறிப்பாக செங்கரும்பு, செவ்வாழை விளைந்த நிலத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, பசுவைக் கொண்டு சுத்தப்படுத்தி (அதாவது பசுவை வலம் வரச் செய்தல்), அதன் பின்னர் யாக குண்டம் அமைத்து ஹோமம் செய்வதுதான் முறையானது.
34. தற்போது சிமெண்ட் அல்லது டைல்ஸ் தரையின் மீது வீடு கட்டுவதற்குப் பயன்படுத்தும் மணலைப் பரப்பில், செங்கற்களை அடுக்கி பெயருக்கு ஹோமம் செய்கின்றனர். இதனால் நிச்சயம் முழுப்பலன் கிடைக்காது.
35. இன்றைய சூழலில் ஹோமம் நடத்துவதற்கு வரும் குருமார்கள், கையில் செல்போன் சகிதம் வருகின்றனர். அதில் அழைப்பு வந்தால் பேசிக் கொண்டே மந்திரங்களை ஜெபிக்கின்றனர். இதுவும் சரியான முறை அல்ல. கண்டிக்கத்தக்கது.
36. ஹோமம் செய்யும் போது குறிப்பிட்ட ஆவர்த்திகளை உச்சரிக்கும் சமயத்தில் 100% கவனம் தேவை. முறையான சமித்துகள் கொண்டு யாகம் செய்யும் போதுதான் முழுமையான பலன் கிடைக்கும்.
37. பல்வேறு வகையான ஹோமம், யாகங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட தியாகமே சிறந்த பலனை அளிக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, யாகத்தை விட தியாகம் தான் வெற்றியைக் கொடுக்கும்.
38. ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் (2ஆம் இடம்) நன்றாக இருந்தால், ஏழ்மை நிலையிலும் அவருக்குத் தரமான கல்வி கிடைக்கும். இதனை அனுபவ ரீதியாகப் பலர் தங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்க முடியும். உதாரணமாக, ஏழ்மை நிலையில் உள்ள மாணவனின் கல்வி தடைபடாமல் தொடர, அவனது வகுப்பு ஆசிரியரே கல்விக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வார்.
39.ஜோதிடத்தைப் பொறுத்தவரை 2ஆம் இடம் வாக்கு ஸ்தானத்தை மட்டுமின்றி, ஆரம்பக் கல்வியையும் குறிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 4ஆம் இடம் உயர் கல்வியையும், 9ஆம் இடம் மேல்நிலைக் கல்வியையும் (கல்லூரி, பல்கலைக்கழகம்) குறிக்கிறது.
40. 5 ஆம் இடம்தான் மனதைக் குறிக்கிறது. படிக்கும் பாடங்களை ஒருவர் நன்றாக மனதில் பதியவைத்துக் கொள்வதற்கு உதவுவது இந்த 5ஆம் இடம். ஒருவருக்கு 5ஆம் இடம் சிறப்பாக இருந்தால்தான் கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். நினைவாற்றல் நன்றாக இருக்கும். தேர்விலும் அதிக மதிப்பெண் பெற முடியும்.
41.படிக்கும் காலத்தில் ராகு தசை, ஏழரைச் சனி, அஷ்டமச் சனி வந்தால் அந்த மாணவர், மாணவியின் வாழ்வில் சூறாவளி வீசத் துவங்கிவிடும். எனவே, பெற்றோர் தங்களின் வாரிசுக்கு ராகு தசை நடக்கும் காலத்தில் அவர்கள் மீது படிப்பைத் திணிக்காமல், அவர்களின் பிரச்சனைகளை, இடையூறுகளைப் புரிந்து கொண்டு கல்வி புகட்ட வேண்டும். சில மாணவ, மாணவிகளுக்கு பாலியல் சித்ரவதைகள் கூட ஏற்படலாம்.
42. ஒருவருக்கு தரமான கல்வி கிடைப்பதைச் சாதாரண விடயமாக கருதக் கூடாது. அதற்குக் கிரகங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். பிறக்கும் போது உள்ள கிரக அமைப்பு, தற்கால் கிரக நிலைகள் ஆகிய இரண்டும் சிறப்பாக இருந்தால், மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவராகத் திகழ முடியும்.
43. வேற்று மதத்தினர், அயல்நாட்டில் வசிப்பர்களை ஆதிக்கம் செய்யும் கிரகங்களாக சனி, ராகு கருதப்படுகிறது. உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. அமெரிக்காவுக்கு குருவும், இங்கிலாந்துக்கு சனியும், ஆஸ்திரேலியாவுக்கு புதனும் ஆட்சி கிரகங்களாகத் திகழ்கின்றன.
44. ஒரு ஜாதகத்தில் இயக்கும் கிரகங்கள், இயங்கும் கிரகங்கள் என்று இரண்டாகப் பிரிக்கிறோம். அதில் ஒரு கிரகம் மட்டுமே இயக்கும் கிரகமாக (Key planet) ஆக இருக்கும். இரு வேறு நபர்களின் ஜாதகத்தில் இயக்கும் கிரகம் ஒன்றாக இருந்தால் அவர்களிடையே பிரச்சனை வராது. எனவே இயக்கும் கிரகம் ஒத்துப்போனால் வேற்று மதத்தைச் சேர்ந்தவருடன் கூட கூட்டாகத் தொழில் தொடங்கலாம்.
45. ஜோதிடத்தில் கூட ஆணாதிக்கக் கிரகங்கள், பெண் ஆதிக்கக் கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. குரு, செவ்வாய், சூரியன் ஆகியவை முழுமையான ஆணாதிக்கக் கிரகங்கள். சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் முழுமையான பெண் ஆதிக்கக் கிரகங்கள்.
46. ஒரு மனிதனின் (ஆண்/பெண்) ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் நன்றாக இருந்தால், அவர் வாழ்வில் நல்ல நிலைக்கு எளிதாக வந்துவிட முடியும். சந்திரன் மனோகாரகன் என்பதால், முடிவெடுக்கும் திறமையை இவரே நிர்ணயிக்கிறார்.
47. ஒரு வீட்டில் பெண்ணின் ஜாதகம் சிறப்பாக இருந்தால் அந்தக் குடும்பம் சீரும், சிறப்புமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில பெண்களுக்குக் குடும்ப ஸ்தானம் (2ஆம் இடம், வாக்கு ஸ்தானம்) நன்றாக இருக்கும். அதுபோன்ற அமைப்புடைய பெண்களை மருமகளாகத் தேர்வு செய்தால் மணமகன் குடும்பத்தினர் சிறப்பாக வாழலாம்.
48. ஒருவரின் ஜாதகத்தில் (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) லக்னாதிபதி நன்றாக இருந்தால் சுற்றி இருப்பவர்களை மதித்து நடப்பவர்களாகவும், மற்றவர் மனதை புண்படுத்தும் குணம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். இன்றைய அவசர உலகில் கூட தனது தாயை விட மனதளவில் முதிர்ச்சியடைந்த மகளை நான் பார்த்துள்ளேன். அதற்குக் காரணம் அவர்கள் ஜாதகத்தில் லக்னாதிபதியும், 2ஆம் இடமும் சிறப்பான கிரக அமைப்பு பெற்றிருப்பதே.
49. ஆறுக்கு உரியவனின் தசை, 8க்கு உரியவனின் தசை, பாதகாதிபதி தசை நடக்கும் போது தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதை சம்பந்தப்பட்ட பெண்கள் தவிர்க்க வேண்டும். அதுபோன்ற காலகட்டத்தில் யோகா, தியானம் போன்றவற்றிலும் பெண்கள் மனதைச் செலுத்தலாம்.
50. ஜோதிடத்தில் ரத்தத்திற்கு உரிய கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ராகு, சனி ஆகியவை பகையாகும். ஒரு சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்+சனி அல்லது செவ்வாய்+ராகு சேர்க்கை காணப்படும்.இவர்களுக்கு செவ்வாய் தசை காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ரத்தத்தின் சேர்க்கையிலும் மாறுதல் காணப்படும்.
51. செவ்வாய்+சனி சேர்க்கை இருந்தால் ரத்தத்தில் இரும்புச் சத்து, கால்சியம் அதிகரிக்கும். எனவே, இதுபோன்ற கூட்டுக் கிரகச் சேர்க்கை பெற்றவர்கள் சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
52. ஒருவருக்கு ஏழரைச் சனி வந்தால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைந்த அளவிலாவது ஏற்படும். இது ஏழரைச் சனிக்கு மட்டுமின்றி அஷ்டமச்சனி, சனி தசைக்கும் பொருந்தும்.
53. அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சொகுசாக வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து, அதிகளவில் நடைபழக வேண்டும். சனி எளிமைக்கு உரிய கிரகம் என்பதே அதற்குக் காரணம்.
54. இருதயக் கோளாறுகளுக்கு சூரியனும், சந்திரனும் பொறுப்பாகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால், அவருக்கு இருதயக் கோளாறு ஏற்படாது. மாறாக, சந்திரனுக்குப் பாவ கிரகங்களின் சேர்க்கை, கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
55. சந்திரனுக்கு 6, 8, 12இல் குரு இருந்தால் அதனை ஜோதிடத்தில் சகட யோகம் எனக் கூறுவர். அது போன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
56. ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள 12 ராசிகளில், மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் அசை போடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே இரைப்பை வலுவானதாக இருக்கும். செரிமானத்துக்கு உதவும் நீர் சுரப்பிகளும் அதிகமாகச் சுரப்பதால் இவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் விருப்பமாக இருப்பார்கள்.
57. மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் போஜனப் பிரியர்களாக இருப்பார்கள். ருசியாக சாப்பிடுவதை இவர்கள் விரும்புவர்.
58. மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் ஆவியில் வேக வைக்கும் உணவு வகைகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் மகரம், கும்ப ராசிக்காரர்கள் எண்ணெய்யில் பொறித்த உணவுகளை விரும்புவர்.
59. கடகம், மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் தயிர், மோர் மற்றும் அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர்.
60. மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் அதிகம் சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். பசி நேரத்தில் கூட வயிற்றுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்ற உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவர்
61. மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மட்டும் போஜனப் பிரியர்களாக இருப்பர்.
62. புதனின் ராசிகளாக மிதுனமும், கன்னியும் வருவதால் அவர்கள் பார்த்துப் பார்த்துதான் சாப்பிடுபவர்களாக இருப்பர். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னரே அடுத்த வேளை சாப்பாட்டை எடுத்துக் கொள்வர்.
62. ஜோதிட ரீதியாகப் பார்க்கும் போது, ஒருவரின் உணவுப் பழக்கமும், சுவை விருப்பமும் அவரது ராசியைப் பொறுத்தே அமையும். மேலும், உடல்வாகு, குடல்வாகு ஆகியவை லக்னாதிபதி, ராசிநாதன் ஆகியோரைப் பொறுத்து மாறுபடும்.
63. மேஷம், ரிஷபம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் காரம் நிறைந்த உணவுகளை விரும்புவர். துலாம் ராசிக்காரர்கள் சூடாகச் சாப்பிடுவார்கள்.
64. கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகச் சூட்டுடன் சாப்பிடுவர்.
65. மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் மிதமான சூட்டில் உணவு உட்கொள்வர். மீனம், தனுசு ராசிக்காரர்கள் முற்றிலும் சூடு இல்லாத ஜில்லென்ற நிலையில் உள்ள உணவுகளை விரும்புவர்.
66. காதல் என்பது முழுக்க முழுக்க மன எழுச்சி சம்பந்தப்பட்டது. ஒரு பெண்ணை ஆடவன் பார்க்கத் தூண்டுவதும், ஒரு ஆணைப் பெண் பார்க்கத் தூண்டுவதும் சந்திரனும், சூரியனும்தான். இவை இரண்டும் கண்களுக்கு உரிய கிரகம். துவக்கத்தில் கண்கள் வழியாகவே காதல் ஏற்படுகிறது.
67. காதல்/காமத்தைத் தூண்டுவது சுக்கிரன். இதில் ஒழுங்கு நெறிமுறைகளைக் கொண்டு வருவது செவ்வாய் கிரகத்தின் வேலை.
68. காதலிக்காக ரத்தம் சிந்தவும் தயார் என்று வீர வசனம் பேசுபவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் நேர்மறையாக இருக்கும். அதே செவ்வாய் எதிர்மறையாக இருந்தால் காதலை இழந்து தவிப்பார்கள்.
69. சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய 4 கிரகங்களின் பங்களிப்பு காதலுக்கு தேவைப்படுகிறது. இந்தக் கிரகங்களைக் கொண்டுதான் ஒருவரின் காதல் நிறைவேறுமா?அல்லது தோல்வி அடையுமா? என்பதைக் கணிக்க முடியும்.
70. காதலிக்கும் காலத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன தசா புக்தி நடக்கிறது? என்பதையும் பார்க்க வேண்டும். ஏழரைச் சனியில் காதலிப்பவர்கள் அந்தக் காலகட்டம் முடிந்தவுடன் பிரிந்து விடுகிறார்கள். இது அஷ்டமச் சனி காலகட்டத்திற்கும் பொருந்தும்.
71. ஒரு கரு உருவாகும் போது அதில் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ போன்ற அடிப்படை மூலக் கூறுகளை பெற்றோரின் மரபுக் கூறில் இருந்து கருவுக்கு கடத்துவது 5ஆம் இடம் மற்றும் அதற்கு உரிய கிரகமாகும். எனவே, ஒருவர் ஜாதகத்தில் 5ஆம் இடம் நன்றாக இருக்க வேண்டும்.
72. ஐந்தாம் அதிபதி நன்றாக இருந்தால் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து, கௌரவம், பாரம்பரியத்தை அந்த ஜாதகர் காப்பாற்றுபவராகவும், முன்னோர்களின் சொத்தை வைத்து முன்னுக்கு வருபவராகவும் இருப்பார்.
73. ஒருவரின் ஜாதகத்தில் 5ஆம் இடம் பலவீனமாக இருந்தாலும், லக்னாதிபதி நன்றாக இருந்தால் தனது முயற்சியால் வாழ்க்கையில் அவர் முன்னேறுவார். ஆனால் ஒருமுறை முயன்றால் இவர்களுக்கு வெற்றி கிடைக்காது. பலமுறை முயற்சிக்க வேண்டும்.
74. லக்னாதிபதி நன்றாக இருந்து (ஆட்சி, உச்சம் பெறுதல்), நீச்சம் பெறாமல் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் அவருக்கு வீரம், விவேகம் ஒரு சேர இருக்கும்.
75. ஜோதிடத்தைப் பொறுத்தவரை சண்டை, சச்சரவுகளை உருவாக்கக் கூடியது 6ஆம் இடமாகும்.ஒருவர் ஜாதகத்தில் 6க்கு உரியவன் பலவீனம்/மறைந்து இருந்தால், அவர் சண்டை, சச்சரவில் ஈடுபட மாட்டார்.
76. ஆறுக்கு உரியவர் 6இல் (வலுவாக) இருந்தால் அந்த ஜாதகர் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார். ஏதாவது ஒரு பிரச்சனையைக் கிளப்புவார். நேரடியாக சண்டையில் இறங்காவிட்டாலும், மற்றவர்களை தூண்டிவிட்டு கலகம் ஏற்படுத்துவர். கடன் தொல்லையும் ஏற்படும்.
77. ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம்.
78. 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இதன் காரணமாகக் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும்.
79. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள், அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம்.
80. சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, இரவில் பால் மட்டும் அருந்தி, மறுநாள் காலை கடுமையான விரதம் இருந்து முருகனை வணங்கி விட்டு வந்தவர்களுக்கு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
81. அகப்பை என்பதை கருப்பை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. மனசுக்கும் அகம் என்று பொருள் உண்டு என்பதால், மனதளவில் உள்ள குழப்பங்களுக்கும் சஷ்டி விரதம் பலனளிக்கும்.
82. சகோதரத்துவம், ரத்தம், நிலம், மன தைரியம் ஆகியவற்றிற்கு உரியவராக செவ்வாய் கருதப்படுகிறார்.
83. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்து விட்டால், அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு, சகோதர சச்சரவு, தைரியமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் பொதுவாக ஏற்படாது.
84. ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலோ, வக்கிரம் அடைந்திருந்தாலோ அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
85. இதேபோல் ராசிக்கு 8இல் இருந்தாலும் சிறு விபத்துகள் ஏற்படும். எனவே அதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்கள் ரத்ததானம் செய்வதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளைப் பெற முடியும்.
86. குரு கல்விக்கு உரிய கிரகமாகும்.குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள்/ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளைப் புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம். எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம்.
87. எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும்.
88. அகதிகளுக்கு உதவலாம்.வேதங்கள், உபநிடதங்களைப் படிப்பது மட்டுமின்றி அந்த நூல்களைப் புதுப்பிக்கவும், மதநல்லிணக்கம் தொடர்பான நூல்கள் வெளிவர உதவுவதும் நல்ல பரிகாரமாகும்.
89. ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாது. அதனைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பரிகாரம் குலதெய்வ வழிபாடுதான். வருடத்திற்கு ஒரு முறையாவது திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது.
90. ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருந்தால் இருவருக்கும் சுயமரியாதை பிரச்சினை ஏற்படும். ஒருவர் நன்றாக இருந்தால் மற்றொருவர் நன்றாக இருக்க மாட்டார். ஒருவர் வளர்ச்சி அடைந்தால் மற்றொருவர் வளர்ச்சி தடைபடும்.
91. ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் இருந்தால்தான் அது கிட்டும். பரிகாரங்கள் மூலமாகக் குழந்தை பெறும் ஜாதகங்களும் உண்டு. ஆனால் ஜாதகத்தில் குழந்தை பாக்கியமே இல்லையென்றால் என்னதான் செய்தாலும் கிட்டாது.
92. ஜாதகங்களுக்கு என்ன செய்தாலும் நன்மை அடைய முடியாது. முந்தைய காலத்தில் தர்ம, கர்ம புத்திரன் கிடைப்பான் என்று கூறுவார்கள். அதாவது தர்மம் பண்ணு. உனக்குக் கர்மம் பண்ண புத்திரன் இருப்பான் என்பதுதான் இதன் அர்த்தம்.
93. எண்ணத்தைக் கொடுப்பவன் சந்திரன். மனதில் நல்ல விதைகளை விதைக்கக் கூடியவன் சந்திரன். அதனைச் செயல்படுத்தக் கூடியவன் சுக்ரன். எண்ணம் நல்லதாக இருந்தால் நல்லவையே கிடைக்கும்.
94. வெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு) வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர். பொதுவாக வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கு தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
95. புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.
96. வெள்ளெருக்குச் செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளதால், அதனைக் பார்த்தவுடன் வெட்டிவிடாமல் மேற்கூறிய பரிகார முறைகளைக் கடைப்பிடித்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
97. இடம்புரி விநாயகர் வினைகளை தீர்க்கக் கூடியவர் என சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. வலம்புரி விநாயகர் வல்லமை, வளமை, செல்வ பாக்கியம் ஆகியவற்றை அளிக்க வல்லவர். பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வலம்புரி வகையைச் சேர்ந்தவர்.
98. இடம்புரி விநாயகர் தீய சக்திகளை அழிக்கும் வல்லமை உடையவர். எனவேதான் திருஷ்டி, வாஸ்து சாஸ்திரம் ஆகிய குறைகளுக்காக வைக்கப்படும் விநாயகர் இடம்புரி விநாயகராக இருந்தால் நல்லது.
99. சூரியனின் வீடு சிம்மம்.
100. பரிகாரங்கள் செய்வதால் நிவாரணம் பெறலாம். குறிப்பிட்ட விருட்சத்தை பராமரிக்கும் போது அல்லது மரக்கன்றை நடும் போது கிரகத்தினால் ஏற்படும் தாக்கம் குறைகிறது. அதேபோல, அந்த ராசிக்குரிய கடவுளை வணங்கும் போது கடுமையான பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment