Friday, 23 November 2018

துர்மரணம் அடைந்த உறவினர்களை வணங்கலாமா?

                          துர்மரணம் அடைந்த உறவினர்களை வணங்கலாமா?

துர்மரணம் அடைந்த உறவினர்களை வணங்கலாமா? இன்னல் தரும் ஒருசில ஆத்மாக்கள்...
ஆவிகள் சூரியனை நோக்கிச் சென்றால் சொர்க்கம்! சந்திரனை நோக்கிச் சென்றால் வைகுண்டம்!! இங்கு செல்லும் ஆவிகள் மறுபிறவி பிறக்கும்.
சனிக்கிரகத்தை நோக்கிச் சென்றால் நரகம். பல ஆண்டுகள் கடும்வேதனையை அனுபவிக்க வேண்டும். இதுபற்றிய முழுவிபரம் கருட புராணத்தில் இருக்கின்றது.

திடீர் விபத்து, தற்கொலை, போர், கலகம், கொலை, எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை, எங்கே இறந்தார்களோ, அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.
இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.

நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும். சுமார் 20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியே எங்கும் செல்ல முடியாது. உயரேயும் பறக்க முடியாது.

இதைத்தான் மந்திர தந்திரங்கள் தெரிந்தவர்கள் தீய செயலுக்கு பயன்படுத்துவார்கள். அருளாளர் களின் ஆசி கிடைத்தால் இந்த ஆவிகளுக்கு விடுதலை கிடைத்துவிடும்.

துர்மரண ஆவிகள் குழந்தைப் பேற்றைத் தடுக்கும் ஆற்றல் நிறைந்து காணப்படும். ஆண், பெண் இருவருக்கும் குழந்தைப்பேறுக்குண்டான தகுதி இருந்தாலும் சில நேரங்களில் இதுபோன்ற துர் ஆவிகளால் குழந்தைப் பேறு தடுத்து நிறுத் தப்படும்.

துர்மரணம் அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது. அவர்களை வணங்கக்கூடாது. அவர்களுக்கு படையல் போடக்கூடாது. உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப் போகச் செய்யலாம்.

துர்மரணமடைந்தது வாலிப வயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத் துன்புறுத்தும். வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிப வயதுப் பையனைத் துன்புறுத்தும். கைகள், கால்கள் உள்ளங்கால்கள் தொப்புள் ஆகிய இடங்களில் மருதாணி இலையை மட்டும் பிடுங்கி அரைத்துத் தடவி வந்தால் துர் ஆவிகள் தாக்காது. (இதனால்தான் பெண்கள் அடிக்கடி மருதாணி அணிய வேண்டும் என்று முன்னோர்கள் கூறினார்கள். தற்போது கடைகளில் விற்கும் மெகந்திக்கு பேய் பிசாசுகளை விரட்டும் சக்தி கிடையாது. சுத்தமான மருதாணி இலைக்கே இந்த சக்தி உள்ளது.)

ட்யூப்லைட் வெளிச்சத்தில் துர் ஆவிகள் செயல்பட முடியாது. ஏன் எனில் அதில் பாதரசம் உள்ளது. பிரண்டைத் துவையல், தடியங்காய் (வெண்பூசணி லேகியம்), வெள்ளைப்பூண்டு லேகியம் சாப்பிட்டால் துர் ஆவிகள் தாக்குதல் இராது. வீடுகளில் வெண் பூசணியை கட்டி தொங்கவிடுவதும் இதற்குத்தான். சாம்பிராணி, வலம்புரிக்காய், கோஷ்டம், விரலி மஞ்சள் ஆகியவைகளை நன்கு இடித்து அதிகாலை மற்றும் இரவு நேரங் களில் புகைபோட ஆவிகள் ஓடி விடும். புகைபோட்ட பின் கைகளை நன்கு கழுவ வேண்டும்
.
ஹாஸ்டல்கள், அரண்மனைகள், ஆஸ்பத்திரிகள், சில வீடுகளில் இப்படிப்பட்ட ஆவிகள் இருக்கும்.

ஒருசில மாந்திரீகத் தொழில் தெரிந்தவர்கள் மூலமாக பச்சைப் பானைகளில் அடைத்து இவற்றை ஆற்றங்கரை, குளக்கரை, கடற் கரை, வனங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கும் விடுதலை. நமக்கு பெரும் புண்ணியம் தரும் செயலாகும்.

Monday, 5 November 2018

தமிழ்ச் சித்தர்கள்

                                                               தமிழ்ச் சித்தர்கள்

உடற்கூறு கணிதம்!
__________________
எண்ணும் எழுத்தும்!

21600 மூச்சுக்காற்று

உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது. இப்படி ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம். இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும் கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது. ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது, (21,600 X 10 )= 216000 ஆன்ம சக்திக் கலைகள்.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம்(அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

அருளொலி வீசும் ஆன்மா (அ+உ+ம்=) ஓம் என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும். இதன் கலப்பு (10 X 6) = 60 நாத விந்து கலையாகவும் கூறப்படும்.

இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம் வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக் கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம கலையாற் பகுத்து, காலக் கணக்கு கண்டுள்ளனர்.

அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60 விநாடி (60 X 60 = 3600 கலை) ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000 கலை ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை. 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக் கல்வி என்னவென்றால் மூச்சே நேரம். இதுவே அனைத்து வேதங்களும், சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும் சொல்வதும்.

நாம் விடும் மூச்சானது உள்ளே வெளியே என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. காலச்சக்ரம் என்பது நாம் விடும் மூச்சைக் கொண்டும், நேரத்தைக் கொண்டும், வான்வெளியைக் கொண்டும் கணக்கிடப்படுவது.

10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரத்தை உச்சரிக்க நமக்கு ஒரு மூச்சை அதாவது நான்கு விநாடி செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

மூச்சின் கணக்கு:

1. ஒரு நாள் நாம் விடும் மூச்சு 21600 . இதில் நாளின் முதல் பாதியில் 10800 மறு பாதியில் 10800.
2. ஒரு மூச்சென்பது நான்கு விநாடிகள்.

நேரத்தின் கணக்கு:
1. 24 மணிநேரம் x 60 நிமிடங்கள் = 1440 நிமிடங்கள்
2. 1440 நிமிடங்கள்x 60 விநாடிகள்= 86400 விநாடிகள்; 86400/21600 = 4 விநாடிகள்= 1 மூச்சு
3. 1 கடிகை என்பது 24 நிமிடங்கள்= 1440 விநாடிகள் (=360 மூச்சுக்கள் )

சித்தர் வான்வெளியின் நேரக் கணக்கு:
1. ஒரு சதுர்யுகம் = 1 கல்ப வருடம்/1000
2. 10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரம் = 1 மூச்சு (மூச்சு = 4 விநாடிகள்) 360 மூச்சுக்கள் = 1 கடிகை (=24 நிமிடங்கள்)
3. 60 கடிகைகள் = 1 நாள்
4. 1 சதுர்யுகம் = 4320000 சூரிய வருடங்கள்


ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது:

1. கிரேதா யுகம் = 1728000 சூரிய வருடங்கள்

2. திரேதா யுகம் = 1296000 சூரிய வருடங்கள்

3. துவாபர யுகம் = 864000 சூரிய வருடங்கள்

4. கலி யுகம் = 432000 சூரிய வருடங்கள்

நந்தனார் கீர்த்தனையில் 'எட்டும் இரண்டமறியாத மூடன்' என்கிறார். 8 என்பது 'அ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது 'உ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்
தகும்'

யந்திரம் எழுதும் முறைகள்

                                                       யந்திரம் எழுதும் முறைகள்

நீங்கள் வெளியில் தகட்டில் எழுதும் யந்திரங்களையும் அதில் எழுதும் அட்சரங்களையும் முதலில் உங்கள் மனதில் தியானித்து அந்த யந்திரத்தை மனக்கண்ணால் பார்த்தவாறே ஆத்மாவில் வரையவும். ஒவ்வொரு கோடாக ஒவ்வொரு அட்சரமாக மனக்கண்ணில் பார்த்தவண்ணம் ஆழ்மனதால் தியானித்து உங்கள் மார்பின் உள்பகுதியில் எழுதுவதாக பாவித்துக் கொள்ளவும்.
யந்திரம் முழுமை பெற்றபின் சற்று நேரம் அந்த யந்திரத்தின் மூல மந்திரங்களை செபிக்கவும். அதன்பிறகு தயாராக வைத்துள்ள யந்திர தகட்டில் எழுதுகோல் துணையுடன் எழுதவும். இவ்வாறு செய்யும்போது ஆத்ம சக்கரம் முழுவலிமையுடன் அப்படியே யந்திர தகட்டில் பதியும். அந்த யந்திரமே பலன் கொடுக்கும்.
ஆதிசங்கரர்கூட இந்த முறையை கடைபிடித்தே சக்கர ஸ்தாபிதம் செய்தார். ஒரு யந்திரம் எழுதுகிறீர்கள் என்றால் அதை முதலில் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். இன்னொரு வரைபடத்தை பார்த்து பார்த்து வரைவது முழுபலன் தராது. கவனம் மற்றும் கருத்து சிதறல் உண்டாகும். ஆன்மிகர்கள் உண்மையிலேயே மந்திர சித்தி செய்திருந்தால் ஆரம்ப சித்திகளை செய்திருந்தால் மனப்பாட சக்தி தன்னால் தன்னிடம் இருக்கும். எனவே அதைக்கொண்டு யந்திர வரைபடத்தை பார்த்து அதன் கோடுகள் அட்சரங்கள் என முழுவதையும் சற்றுநேரம் உற்றுபார்த்து மனப்பாடம் செய்துகொண்டு பிறகு மனதியானம் செய்து அடுத்து வெளியில் யந்திரம் எழுதி பின் நன்னீரால் சுத்தப்படுத்தி மீண்டும் மந்திரம் செபித்து உரியவரிடம் சேர்பிக்க வேண்டும். இதுவே யந்திரம் சித்தியாகி வலிமையுடன் பலன் கொடுக்கும்.
இயந்திரங்கள் வரைவதற்கான சில பொது விதிமுறைகள் இருக்கிறது அவற்றை பார்க்கலாம்.
அட்ஷரம் கீறும் முறை – பொதுமுறை

1. செம்புத்தகடாக இருக்க வேண்டும்
.
2. குறைந்த பட்சம் 5” x 5” அங்குலமாக இருக்கவேண்டும்.

3. இருப்பு ஆனியினால் கீற வேண்டும்.

4. தகட்டில் காயம் ஏதும் வரக்கூடாது.

5. கீறும்போது சிறுதவறு ஏற்பட்டாலும் திருத்தம் செய்யக்கூடாது. மீண்டும் புதிய தகட்டில் கீறவும்.

6. கோடுகள் தெளிவாக இருக்கவேண்டும்.

7. எழுத்துக்கள் அல்லது இலக்கங்கள் சற்று அழுத்தமாக இருக்க வேண்டும்.

8. சமச்சீர் சரியாக இருக்க வேண்டும்.

9. கோணங்கள் சரியாக இருக்க வேண்டும்.

10. வாசல் மற்றும் மூலை நேராக வர வேண்டும்.

11. விந்து என்னும் வட்டம் மையத்தில் அமைய வேண்டும்.

12. ஓங்காரம் சுற்றும்போது சரியாக அட்ஷரம் அதனுள் அமையவேண்டும்.
இந்த விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்தால் அட்ஷரங்கள் சரியான பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை

சித்தர்களும்... நட்சத்திரமும்.. பிரச்சனைகளும்

                       சித்தர்களும்... நட்சத்திரமும்.. பிரச்சனைகளும்

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். அவர்கள் தங்கள் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சினை தீர வழிபிறக்கும்.

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலரும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் தங்கள் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சினை தீர வழிபிறக்கும்.

ஒரு முறையாவது உங்களுக்குரிய சித்தர் ஜீவ சமாதிக்கு நேரில் சென்று, ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதந்தோறும் உபவாசம் இருந்து வணங்கி வந்தால் பல மாறுதலான பலன்களை காண முடியும்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும், பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அதன்படி சென்று வழிபட்டு நலம் காணுங்கள். பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி, சிவாலயமாகவே இருக்கும்.

* அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய சித்தரின் பெயர் காளங்கிநாதர். இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்கு பெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ‘ஓம் குருவே சரணம்’ என மூன்றுமுறை கூறி, ‘ஓம் ஸ்ரீ காளங்கிநாதர் சித்த குருசுவாமியே சரணம்.. சரணம்..’ என முடிந்தளவு கூறலாம்
.
மற்ற நட்சத்திரக்காரர்களும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தருக்கான பெயரை சேர்த்துக்கொள்ளவும்.

* பரணி நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் போகர் ஆவார். இவருக்கு பழனி முருகன் சன்னிதியில் சமாதி உள்ளது.

* கார்த்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தருக்கு உரியது. இவருக்கு சமாதியும் இல்லை. இவரது உடல் அழியவும் இல்லை. நேரடியாக கயிலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கட்கிழமை வெள்ளை ஆடை அணிந்து, வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.

* ரோகிணி நட்சத்திரத்திற்கு உரியவர் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

* மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரியவராக இரண்டு சித்தர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பாம்பாட்டி சித்தர். மற்றொருவர் சட்டமுனி சித்தர். இதில் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் சமாதி ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது.

* திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடாருக்கு உரியது. இவரது ஜீவசமாதி, நெருப்பு பிழம்பாக ஈசன் நின்ற திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.

* புனர்பூச நட்சத்திரத்திற்குரியவர் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

* பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தருக்கு உரியது. இவர் திருவாரூரில் ஜீவ சமாதி அடைந்துள்ளார்.

* ஆயில்யம் நட்சத்திரத்திற்கான சித்தர் அகத்தியர். இவரது ஒளிவட்டம் குற்றாலப் பொதிகை மலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது.

* மகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவரது ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.

* பூரம் நட்சத்திரத்தில் தோன்றியவர் ராமதேவ சித்தர். இவரது ஜீவ சமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை. நம் நாட்டினர் இவரை வழிபட அழகர் மலைக்குத் தான் செல்வார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்டாளையும் வழிபடலாம். அவரை ஸ்ரீவில்லிபுத்தூரில் வழிபட வேண்டும்
.
* உத்திரம் நட்சத்திரம் சித்தர் காகபுஜண்டருக்கு உரியது. இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.

* ஹஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூராருக்கு உரியது. இவர் சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.

* சித்திரை நட்சத்திரத்திற்கு உரியவர், சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவரது ஜீவ சமாதி உள்ளது.

* சுவாதி நட்சத்திரத்திற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் இருக்கிறது.

* விசாகம் நட்சத்திரத்திற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவர். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

* அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகிக்கு உரியது. இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

கேட்டை நட்சத்திரம் பகவான் வியாசருக்கு உரியது. இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.

* மூலம் நட்சத்திரத்திற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

* பூராடம் நட்சத்திரத்திற்குரியவரும் ராமேதவர் சித்தரே. இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.

* உத்திராடம் நட்சத்திரத்திற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

* திருவோணம் நட்சத்திரம் சித்தர் தட்சிணாமூர்த்திக்கு உரியது. இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

* அவிட்டம் நட்சத்திரம் சித்தர் திருமூலருக்கு உரியது. இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்.

* சதயம் நட்சத்திரத்திற்கு உரியவர் கவுபாலர். இவரின் சமாதி எங்கிருக்கிறது என்பதற்கான தெளிவான குறிப்புகள் இல்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்
.
* பூரட்டாதி நட்சத்திரத்திற்கான சித்தர் ஜோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.

* உத்திரட்டாதி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. இவர் சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையின் ஒலியாக வந்து, இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்
.
* ரேவதி நட்சத்திரத்திற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மட்டும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள்.